விதைக்குள் விருட்சம், விழுந்தே முளைக்குது, ஒரு மரம். வேர்கள் மண்ணைப் பிடிக்குது, துளிர்கள் அரும்புது, துளித்தே வளர்வது பெருமரம்; பூந்தளிர்கள் பூத்து காயாகுது; வளர்ந்தே தருவது, பல நூறு காய், கனிகள்; பழங்கள் பலன் அளிக்கிறது, பழத்தில் புதைந்த கொட்டை வித்தாகுது; வித்தில் பிறக்குது மீண்டும் விருட்சம்; வனமாய் மாறுது விதைக்குள் இருந்து பிறந்த விருட்சம்; நிழல்களைத்தந்ததும் அந்த மரங்கள், நெடு நெடு என்று வளர்ந்தது மரங்கள்; விதைதான் விருட்சமடா; விழுந்தே முளைத்த மரங்களடா. விதைக்குள் மரங்களடா; வளரத்துடிக்கும் மரங்களடா! மூளைக்குள் ஒரு வித்து, முளைக்கத்துடிப்பது பெரும் சொத்து. போட்டது ஒரு வித்து, புறப்பட்டது ஒரு உசுறு. உதிர்ந்தது ஒரு ஒரு துளியாய், சேர்ந்தது மழைத் துளியாய், விரைந்தது நதியாய்; கடலில் சேர்ந்து, நீண்டது நீர்ப்பிரளயமாய். ஒரு துளி, ஒரு துளி; கண்ணீர்த்துளியாம்; வடித்தது வடித்தது பெரும் துயராம்; சிந்தியது, சிந்தியது; சிறு, சிறு வேர்வைத்துளியாம், உழைப்பு தந்தது பெரும் வெற்றியாம். படைத்தது படைத்தது ஒரு உயிராம்; படர்ந்தது படர்ந்தது, பாரில் பல இனமாம்; அணுக்கள் அணுக்கள் சேர்ந்தனவாம், அதிசயங்கள் ஆயிரம் படைத்தனவாம்; திசுக்கள் திசுக்கள் ஒன்று சேர்ந்தனவாம்; சிசுக்கள் சிசுக்கள் உருவாகினவாம்; இனங்கள், இனங்கள்; சேர்ந்தது தான் உலகமடா. சேர்ந்தது, சேர்ந்தது, ஒரு ஒரு கரங்களாய்; தேசத்தை இணைக்குது பல கரங்களாய்; ஒரு உளி, ஒரு உளி, சிலை வடிக்குமாம், ஒரு கரம், ஒரு கரம், நாற்கரம் ஆகுமாம். ஒரு துளி ஒரு துளி இணைந்து, புனலாய் புறப்பட்டது, புரண்டே, புரண்டே புது வெள்ளமாய் பாய்ந்திடத் துடித்தது; ஒரு சொல், ஒரு சொல் கசக்கின்றதே! ஓராயிரம் பகையை மூட்டுகின்றதே! மறு சொல், மறு சொல் இனிக்கின்றதே! மனதில் அன்பை விதைக்கின்றதே. பனித்துளி, பனித்துளி; உதிர்கின்றதே, படரும் குளிராய் துடிக்கின்றதே. ஒருகரம், மறு கரத்தை தாங்குகின்றதே, சிகரத்தின் உச்சியை அடைகின்றதே. ஒரு பொறி, ஒரு பொறி; தீப்பொறியாய் எரிகின்றதே. ஒரு உடல்; ஒரு உடல் சேர்ந்து, ஜீவன் உயிர் பெருகின்றதே. ஒரு மரம், ஒரு மரம் கூடி பெரு வனம் ஆகின்றதே! ஒரு துளி, ஒரு துளி சிந்தனை; சேர்ந்து படைப்பை படைக்கின்றதே. விதைதான் விருட்சம், வியர்வைதான் வெற்றி, விடியல் தான் துவக்கம். விதைக்குள் விந்தையடா! விடியலின் வித்தையடா! விசித்திர உலகமடா! இது தான் விடுதலை முழக்கமடா. விதைக்குள் விருட்சம், விடியலில் உண்டு வெளிச்சம், விடுதலையில் உண்டு சுபிச்சம்; துளிகளின் பெருக்கம் நீரோட்டம்; துணிந்தே செயல்படு, குனிவெதற்கு. பனியின் துகள்கள், படரும் குளிர்கள், பகையுடன் தொடரும் குரோதம், விளக்கும் ஒரு பொறிதான், வெளிச்சத்தை உமிழும் வரைதான். விதை விதைத்திடு, விடியலைத்தேடிடு, விதைக்குள் உண்டு மரம், உன் விடியலுக்குத்தேவை தினம் உழைப்பு
Chennai, Tamil Nadu, India.