Blog

ஆனால் மனிதா ஆகையால் மனிதா

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 12/01/2024
  • Category: thathuvam
  • Views: 145
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

ஆனால் மனிதா , ஆகையால் மனிதா, அட ஆம் மனிதா, உள்ளே நான், வெளியே நீ; உள்ளிருந்து செயல்படும் உன் மனசாட்சி நான் ; வேண்டாததைச் செய்பவன் நீ; வெந்து நொந்து போய் கிடப்பவன் நான்; வேண்டும் என்றே தவறை செய்பவன் நீ; வேண்டாம் இந்த தவறு என்று வேண்டுபவன் நான், வேடம் போடுபவன் நீ; வேடத்தைக் கலைக்க நினைப்பவன் நான்; வெறுப்பில் நீ; வேதனையில் நான்; வெறி பிடித்தவன் நீ; நெறியைத் தேடுபவன் நான்; வெற்றிக்கு துடிப்பவன் நீ வாழ தவிப்பவன் நான்; பொறாமை கொண்டவன் நீ பொறுமையை கடைபிடிப்பவன் நான்; பொல்லாதவன் நீ புலம்புபவன் நான்; உன் வழி உள் வலி; உறங்காத விழி உன் விழி; ஊமையான வலி உள் வலி; திடமாய் நான்; திமிராய் நீ; தேடலில் நீ தெரியாத சோகத்தில் நான்; ஆட்டம் ஆர்பாட்டமே நீ; அமைதியைத் தேடும் ஆன்மா நான்; ஆசை மோகத்தில் தத்தளிக்கும் நீ; அது வேண்டாம் என்று தள்ளி நிற்க விரும்பும் நான்; மோக வலையில் நீ; மௌன ராகமாய் நான்; ஆகாததைப் போகாததை செய்ய விரும்புபவன் நீ; அடங்கிக் கிடப்பவன் நான்; சிரித்து சிரித்து மகிழ்கின்றாய்; சிந்தித்து சிந்தித்து மனம் அமைதியாகின்றேன்; சிரிக்க மறந்து கதறும் போது நான் சற்று சினம் தான் கொள்வேன்; ஆகையால் மனிதா, மனிதன் நீ, ஆனாலும் மணக்கும் மனம் நான்; அய்யய்யோ அகம் பாவம் பிடித்த மனிதா, அநியாயத்திற்கு துணைபோவாய் நீ; அப்பப்பா மனம் நான், அகம்பாவம் பிடித்த உனக்குள்ளும் இருந்து, அமைதியைத் தேட தவிக்கும் மனம் நான்; கண்ணீரில் கரைபவன் நீ; காணமல் இரக்கம் காண்பவன் நான்; கண்டும் காணாமல் போபவன் நீ; கண்டவுடன் பரிவுகாண்பவன் நான்; ஆனாலும் மனிதா நீ, அடம்பிடித்தே சாதிக்க நினைப்பாய்; அமைதியாய் இருந்தே சாதிக்கத் துடிப்பேன் நான்; பசி எடுத்தால் பாய்ந்து துடிப்பாய்; பசியில் பிறர் துயரையும் பார்ப்பவன் நான்; பகுத்தறிவு என்ற பெயரில் பாவத்தைச் செய்பவன் நீ; பக்குவமாய் நடக்க விரும்புபவன் நான்; படாடோபத்தைத் தேடி பட படப்பவன் நீ; பட்டது போதும் என்று நினைப்பவன் நான்; பாவத்தைச் சுமப்பவன் நீ; பாடுபட்டுத் திருத்த நினைப்பவன் நான்; நன்றி மறந்தவன் நீ; நன்றாய் இருக்க விரும்புபவன் நான்; நன்றி கெட்டவன் நீ; நன்றிக் கடனை தீர்க்க நினைப்பவன் நான்; அன்பை தொலைத்துவிட்டு கதறுபவன் நீ; அன்பே ஆதாரம் அறம் என்று நினைப்பவன் நான்; சுகம் தேடும் சுயநலவாதி நீ; சும்மா இருக்காது சுயநலத்திலும் பிறர் நலம் காணத் தவிக்கும் மனிதாபி நான்; கண்மூடித்தனமாய் செயல் படுபவன் நீ; கண்ணியம் காக்க துடிப்பவன் நான்; கண் இருந்தும் குருடன் நீ; கண் இல்லாமல் உன்னை கண்காணிக்கும் அகம் நான்; அழுக்கைச் சுமக்கும் புறம் நீ; மாற்றத்தில் தடுமாற்றத்தில் ஏமாற்றத்தைக் காண்பவன் நீ; மாற்ற முடியாதவன் நான்; அடுக்கடுக்காய்ப் பணக்கட்டுக்களை சேர்க்க நினைத்து பாவத்தை அடுக்கிக் கொண்டே போபவன் நீ; அடம்பிடிக்கும் உன்னை நினைத்து அழுது கொண்டே துடிக்கும் மனம் நான்; எதிலும் குறை கண்டுபிடிப்பவன் நீ; எந்த குறையையும் பெரிதாய் நினைப்பவன் நான்; ஆனவரை ஆதாயம் தேடுபவன் நீ; அடுத்தவர் மேல் இரக்கம் காட்டுபவன் நான்; இறக்கும் வரை இன்புற்று இருக்க நினைப்பவன் நீ; இருக்கும் வரை அமைதியைத் தேடுபவன் நான்; ஆம் மனிதா அமைதியை அங்கும் இங்கும் ஓடி தேடுவதை விடுத்து, உன்னுள் அமைதியைத் தேடு, உடன்படாத செயலைச் செய்ய மறுத்திடு; கண்ணீரால் சோகத்தைக் கழுவ நினைக்காதே; கண்டும் காணாமல் போக நினைக்காதே; கருணை உள்ளத்துடன் பிறர் கண்ணீரையும் துடைக்கத் துடித்திடு; ஆகவே மனிதா மனிதத்தில் கண்ணியத்தைத் தேடு; மதிப்பு மிக்க மனிதனாய் இரு; ஆகையால் நீ மனிதா; மனித மிருகமாகாமல், மாண்பு மிகு மனிதனாக மாறு; மறுத்தால் கேடு; ஆகையால் மனிதா நான் உன்னுள் இருந்து உன்னையே உளவு பார்ப்பேன்.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media