Blog

அம்மா என்னும் என் உயிர் எழுத்து - அன்னையர் தின வாழ்த்து மடல்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 12/05/2024
  • Category: uravu
  • Views: 152
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

அன்னையர் தினம் இது எங்கள் அன்னையர் தினம் அன்பை செலுத்தும்; அன்னையர் அனைவருக்கும் அன்பை காணிக்கையாக செலுத்தும் உன்னத தினம். ஈன்றெடுத்த தாய்க்கு நன்றி செழுத்தும் உயர்ந்த நன்றிக்கடன் தினம். என்னாலும் ஓயாது எனக்காக வாழ்ந்த என் அன்னையை நினைத்துப் பார்த்து நன்றி நவிலும் நன்நாள். அன்னையில்லாமல் அகிலம் இல்லை; அன்னை ஈன்றிடாத அன்பும் இல்லை; அவள் ஊட்டிடாத பாசமில்லை; தாய் அன்பு தூய அன்பு, தாங்கியே வரும் இந்த அன்பு; சுயநலம் இல்லாத பரிசுத்த அன்பு அரனாய் இருந்து அரவணைத்த அன்பு; உரமாய் இருந்து ஊட்டம் தந்த அன்பு; திடமாய் இருந்து நம்மை பாசத்தில் தினரடித்த அன்பு; சுவையாய் இருந்து சுவைத்த அன்பு; சுகமே அவள் அன்பு என் சுகமே அவள் அன்பு; சுகத்தை அவள் மறந்து சுமையை அவள் சுமந்து சொர்கத்தை நமக்கு காட்டிய அன்பு. அம்மா என்றால் உயிர் மொழி; அன்னைத் தமிழின் முதல் மொழி; சும்மா இருக்காத இந்த விழிமொழி; சுரந்தே தாக்கும் இந்த கருணை மொழி; ஊனோடு உயிரோடு கலக்கும் இந்த அன்னை மொழி; ஓரப்பார்வையிலே ஓடோடு வரும் என் அன்னையின் அன்பு மொழி. ஆதியும் அவள்; நம் அந்தமும் பந்தமும் அருள் ஜோதியும் அவள்; பரிசுத்தமும் பவித்தரமும் அவள். தாவிடும் தென்றல் அவள்; மேவிடும் கருணை மேகமும் அவள்; தாவி வரும் அன்புத் தென்றல் அவள்; தவிக்கும் அன்புத்தாகமே அவள்; வான மழை பொய்த்தாலும், வாழும் நம் அன்னையின் கருணை மழை பொய்காகாது; நிழல் கூட நீடிக்காது ஒளியின்றி; தழல் கூட ஜொலிக்காது நெருப்பின்றி; அழல் கூட சுடாது தணல் இன்றி; குழல் கூட ஊதாது காற்றின்றி; அன்னை அவள் உன்னை காத்திடநிழலாய் இருப்பாள்; நெருப்பாய் இருந்து பொறுப்பாய் காப்பாள்; அருள் சுடயாய் ஜொலிப்பாள்; தென்றாலாய் சுமப்பாள்; தெவிட்டாத தேரலாய் இருப்பாள்; சேயாய் மாறி சிரித்து விளையாடுவாள்; செந்தமிழாய் சுவைப்பாள்; உண்மையாய் இருப்பாள் உன் அன்பு ஒன்றுக்காகவே உருகுவாள்; சருகாய் காய்வாள்; ஓயாது உழைப்பாள்; மடியில் சாய்ந்து கிடப்பதையே சுகமாய் நினைப்பாள்; உன் அன்பு ஒன்றுக்காகவே சுருண்டும் கிடப்பாள்; உன்னையே சுற்றி சுற்றி வருவாள்; நீயே அவள் உலகம் என்று நினைப்பாள்; உன் பிஞ்சிக்கரங்களைப் பிடிப்பதையே பெருமை என்று நினைப்பாள்; தாயின் கரங்கள் அது; பஞ்சி மெத்தை அது; தாயின் கரங்கள் அது, இன்ப சுமைகள் அது ; தாயின் கரங்கள் அது, தூய உறவது ; தாயின் கரங்கள் அது, புனித தேவாலையம் அது; தாயின் கரங்கள் அது, பாதுகாப்பு பெட்டகம் அது; தாயின் கரங்கள் அது, தங்கும் குடில் அது; தாயின் கரங்கள் அது, அன்புச் சரங்கள் அது; தாயின் கரங்கள் அது, பாச சுரங்கம் அது; தாயின் கரங்கள் அது, தாய்மையின் சரணாலயம் அது; தாயின் பாசம்தான் அது, தடுக்கும் பேர் ஆயுதம் அது; பகையை விரட்டும் அந்த ‘அம்மா’சுரம் அது; தூய தாயின் பாசமது, நடிப்போ வேசமோ போடாத பாசமது; தாயின் பாசமது தடுக்கி விழுபவர் யார் அது. அம்மா என்றால் அன்பு; அம்மா என்றால் அற்புதம்; அம்மா என்றால் அடைக்கலம்; அம்மா என்றால் நம் அடையாளம்; அம்மா என்றால் பொற்பதம்; அம்மா என்றால் ஆனந்தம்; அம்மா என்றால் அமர தீபம்; அம்மா என்றால் அழகு தேவதை; அம்மா என்றால் ஆதாரம்; அம்மா என்றால் ஆலயம்; அம்மா என்றால் இனிமை; அம்மா என்றால் நம் முகவரி; அம்மா என்றால் கருணைக் கடல்; அம்மா என்றால் காக்கும் கரம்; அம்மா என்றால் தென்றல்; அம்மா என்றால் சுவாசம்; அம்மா என்றால் விசுவாசம்; அம்மா என்றால் புனிதம்; அம்மா என்றால் வலிமை; அம்மா என்றால் நம்பிக்கை; அம்மா என்றால் அறிய உயிர் ஓவியம்; அம்மா என்றால் தாரக மந்திரம்; அம்மாவை மிஞ்சிய உறவுகள் இல்லை; அன்னையின் கரங்களைத் தவிர பெரிய காப்பகம் எதுவும் இல்லை; அம்மாவை வெறுக்காதே ; அந்த காந்தக் கரங்களை தவிக்க விடாதே. ஆம் அன்னையின் பாசம் அப்பியே வீசும் அவள் அநாதையாகக் கூடாதென்றே சபதம் எடுக்கும் தினம், இந்த அன்னையர் தினம் கண்ணாய் காத்து கண்ட உலகை அடையாளம் தந்து உனக்கு உண்ண சோற்கொடுத்து, உடுத்திய உடையில் அழகுபார்த்து, எடுத்த காரியங்களுக்கெல்லாம் ஆர்வம் கொடுத்து, எதிர்த்து எவர் வரீனும் எதிர்த்தே மோதிட தைரியம் தந்த என் அன்னைக்கு என் அன்பை அர்ப்பணிக்கும் தினம் இந்த அன்னையர் தினம். அவள் தளர்ந்த காலத்தில் தயங்காது நாம் அம்மாவைத் தாங்கவேண்டும் என்று நாம் சபதம் எடுக்கும் தினம். சோர்ந்துவந்தாலும் சோம்பேரியாக இருந்தாலும் தாங்கி ஆதரவு தரும் ஒரே கரம் அன்னையின் கரம்; அன்போ உணவோ பாசமோ அவளுக்கு ஊட்டத்தான் தெரியும், உதாசீனப் படுதத் தெரியாது உபத்திரம் தரத் தெரியாது, கருவறையில் சுமந்தாள் கண்ணீரில் சுமந்தாள் அவள் பாசத்தை இழக்கக் கூடாது என்றே உறுதியோடு சபதம் எடுக்கும் தினம். அன்னையின் அன்பை இழந்தவன் பணம் இருந்தும் பயன் இல்லாதவன். குணம் இருந்தும் கொடூரன். நடமாடும் கடவுளே என் அம்மா என்பதை நினைவு படுத்தும் நாளே அன்னையர் தினம் கரம் கூப்பி வணங்கிடுவோம் கண்ணீர் விடவேண்டாம் நம் அன்னை. தலைசாய்த்த மடியது துவண்டு விடக்கூடாது. சுகமாய் சுமந்த தோள்பட்டையது தளர்ந்து விடக் கூடாது. இரவு பகல் பார்க்காது காத்த கரம் அது கைநடுங்கினாலும் கைவிடக் கூடாது. சிரம் காத்த சீதனம் அது; உயிரைத்தந்த உடம்பது; நீ உதவாதப்பொருளாக வீசாதே உதாசீனம் செய்தே. விலை மதிப்பில்லாத பொக்கிசம் அது, வெறுதாய் வெறித்தே கிடக்கக் கூடாது; நடக்கவைத்து பார்த்து ரசித்த தாயது நடைபிணமாகக் கூடாது; உன்னையே நினைத்து நினைத்து வாழ்ந்த உடம்பது; உறுதெரியாமல் போகக் கூடாது; கரம் பிடித்து காத்த காவல் தெய்வமது, ஒருநாளும் கலங்கிடக் கூடாது; புனித அறையில் பூட்டி காத்த கருவறைத் தெய்வமவள்; கண்ணீர்த்துளிகள் சிந்தக் கூடாது. தாயின்றி இத்தரணியில் உயிர் ஜீவன் இல்லை என்பதை நினைவுபடுத்தும் தினம் நித்தம் நித்தம் தாயை காத்திடவே நீ எடுத்திட வேண்டும் உறுதியும் இத்தினத்தில் தாய்மையே தூய்மையடா தயங்கிடவேண்டாம் இனி அவள் என்னாளும் அன்பெனும் ஊற்றே பாசப் பொழிவே அன்னையே என்னுள் கிடக்கும் எழுச்சியே; அன்னையே என்னைத் தூண்டிய புரட்சியே; எமை உனதுடலாய் நீ சுமந்தாய் உனதுயிராய் நான் இருப்பேன் உனக்காக நான் வாழ்வேன். அன்னை தினத்தில் என் அன்பு சமர்ப்பனம் காலை வணக்கத்தை தாய்மை சுமக்கும் அனைத்து அன்னையருக்கும் கூறுவோம் அ.முத்துவேழப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media