Blog

விடியல் தரட்டும் விடுதலை

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 22/05/2024
  • Category: thathuvam
  • Views: 132
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

விடியல் தரட்டும் விடுதலை விடைகாணப் புறப்படட்டும் மனித இனம்; பசி பட்டினி நீங்கட்டும்; படிப்பினை பரவசப்பேராழியாகட்டும் மகிழ்ச்சியை ஏந்தட்டும்; மன இறுக்கம் நீங்கட்டும்; இரக்கத்தின் ஊற்று பெறுக்கெடுக்கட்டும்; வாய்ப்புக்கள் பெருகட்டும்; வாழ்க்கை வசந்தமாகட்டும்; புன்னகைப் பூக்கட்டும் புறப்படட்டும் புதிய விடியல்; பூக்கட்டும் புது நம்பிக்கை என்னும் புது விடியல்; புகட்டட்டும் புதுப்பாடம் புவியில். விடியலைத் தாங்கட்டும் உதயம், விடுதலை தரட்டும் அறியாமை என்ற இருட்டுக்கு. நீ என்பதில் வன்மம் தொலையட்டும்; நான் என்பதில் நிதானம் பிறக்கட்டும்; நாம் என்பதில் ஒற்றுமை ஓங்கட்டும். மனித இனம் அறியட்டும்: வாழ்க்கை என்பது புதினம். நாட்கள் என்பது உதிரும்; நேற்று என்பது மடியும்; இன்று என்பது முடியும்; நாளை என்பது தொடரும்; யாக்கை என்பது ஓடும்; நீ என்பதில் வன்மம் தொலையட்டும்; நான் என்பதில் நிதானம் பிறக்கட்டும்; நாம் என்பதில் ஒற்றுமை ஓங்கட்டும். உண்மை என்ற புனிதத் சுடர், சூட்சமம் சூதையும் வாதையும் எரிக்கட்டும்; வம்பு தும்புகள் வந்து சேராமல் இருக்கட்டும்; சினம் நீங்கட்டும், குணம் மணக்கட்டும்; குறை குற்றங்கள் மனதில் குடிகொள்ளாமல் இருக்கட்டும்; சோம்பலும் சாம்பலாகட்டும்; துவக்கமும் தூங்காமல் இருக்கட்டும்; எழுச்சியும் சாக்கு போக்கு சொல்லாமல் இருக்கட்டும்; முயற்சி மூட்சாய்யிருந்து முழுதாய் சவாலை ஏற்கட்டும்; சண்டை சச்சரவு நீங்கட்டும்; சமத்துவம் பிறக்கட்டும்; சகோதரத்துவம் வேர் ஊன்றட்டும்; சகிப்புத்தன்மை வளரட்டும்; அறியாமை இருள் மறையட்டும்; அறிதல், தெரிதல், புரிதல், தெளிதல், ஆகுதல் பிறக்கட்டும்; அன்பின் தேடல் தொடரட்டும்; விதையுங்கள் விதைகளை மண்ணில் வளரட்டும் மரம் செடி கொடிகள் விருட்சமாக வரட்டும், வந்த தென்றல் காற்றும், கார்மேகங்கள், நீராய் உருமாறட்டும், பருவமழை வந்தே நனைக்கட்டும் மண்ணை. புவியில் பசுமை நிரம்பட்டும். விதையுங்கள் மனதில் நல்லெண்ணம் நன்னபிக்கை என்னும் விதையை; தூவுங்கள் இரக்கம் கருணையை; வளரட்டும் அன்பு பண்பு பாசம் பரிவு ஒழுக்கம் கட்டுப்பாடு என்னும் மனித மரங்கள்; வீசட்டும் பாசம் பற்றும் நேசம் என்றும் வசந்த காற்று; மனித நேயம், மரம் செடி கொடிகள் போன்று மணக்கட்டும் மண்ணில் மன்னியம் மழைத்துளிகளாய். தொலைந்த நிமிடங்கள் தொலைத்ததாகவே இருக்கட்டும்; தொடரும் நிமிடங்கள் புதிய துவக்கமாக இருக்கட்டும். மணித்துளிகள் மரணத் துளிகளாகவேண்டாம்; மணித்துளிகள் ரணத்துளிகள் ஆகவேண்டாம்; மணித்துளிகள் மழைத்துளிகளாகட்டும் கருணைமழை பொழியட்டும்; மனம் என்னும் மண்ணில் விழுந்து கலந்து நேசம் என்னும் ஆறாய் ஓடி குணக்கடலில் சங்கமமாகட்டும். பகை முறியட்டும்; பயம் விலகட்டும்; புது பயணம் துவங்கட்டும்; புதுவிடியலை நோக்கி முன்னேற மனித இனம் நடை பழகட்டும். 24.05.2024

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media