Blog

எங்கப்பா எனக்கே அப்பா

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 16/06/2024
  • Category: ookkam
  • Views: 143
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

எங்கப்பா எனக்கே அப்பா அப்பா அப்பா நீயப்பா; ஆண்ட தெய்வமே நீதானப்பா; மாண்டே போனாலும்; மீண்டும் மீண்டும் மனதில் நின்றாய் அப்பா; அப்பா நீ அதிசயப் பிறவியப்பா; அப்பா நீ என்றன் ஆயுல் ரேகை அப்பா; உண்டும் உண்ணாமல் உறங்கியும் உறங்காமல் ஊமையாய் இருந்து, உன்னை உருக்கி என்னை உருவாக்கினாயே அப்பா. அப்பா அப்பா அப்பப்பா நீ பட்ட துன்பம் துயரம் ஆயிரம் ஆயிரப்பா; தூணாய் இருந்தாயே அப்பா சிறு தூசி துரும்பு கூட என்மீது படாமல் காத்தாயேயப்பா; துறவியாய் வாழ்ந்து என் பிறவிக்கு பெருமை சேர்த்தாயே அப்பா; ஊமையாய் இருந்து உயிர் கொடுத்து வளர்த்தாயே அப்பா; வந்த கவலைகளை மனதில் சுமந்து உன்னை வதைத்து, மகிழ்ச்சியாக எங்களை வாழ வைத்தாயேயப்பா. கடமையைச் செய்து கரித்துண்டாய் எரிந்து கடைசியில் காற்றில் கரைந்தாயே அப்பா; இறந்தும் மறக்காமல் இதயத்தில் என்றென்றும் குடிகொண்டு இருக்கும் இதய தெய்வமே நீ தான் அப்பா. .&&&&&&&&&&& அப்பா அப்பா அப்பா என்றால் அப்பாவி; அப்பா என்றால் அதிசயப் பிறவி அப்பா என்றால் அதிசயம் அப்பா என்றால் அத்தியாயம் அப்பா என்றால் ஆத்தீச்சூடி அப்பா என்றால் அதிகாரம் அவர் அதட்டலில் இல்லை ஒரு காரம்; அப்பா என்றால் ஏணி, அப்பா என்றால் ஞானி; அப்பா என்றால் கரும்பு; அப்பா என்றாலே குசும்பு; அப்பா என்றால் அப்பும் பாசம்; அப்பா பாசம் அப்படியே மணக்கும்; சுத்தமான பாசம்; சும்மா இருக்காத பாசம்; கத்தி கத்தி பேசினாலும் சுத்திச் சுத்தி வரும் பாசம்; சுகம் துக்கம் தங்கிய பாசம்; தப்பாய் நம்மை வளர்க்காது, தலை நிமிர வைத்த பாசம்; அப்பா என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஆயிரம் யானை பலம் வரும் ; எந்தை என்றால் விந்தை ஏந்திய சுமக்கும் அந்தக்கை; விந்தை விந்தை , விந்தையிலும் விந்தை; தந்தையாய் இருந்து தந்தாய் அனைத்தையும்; தடுமாற விடாது தலைக்க வைத்தாய்; தந்தாய் தந்தாய் உன் உடலைத் தந்தாய்; உன் உயிரைத் தந்தாய்; தந்ததனால் தந்தே தந்தையும் ஆனாய்; ஐயமின்றி வாழ வைத்து அய்யனும் ஆனாய்; ஐயத்தைப் போக்கி அய்யாவும் ஆனாய்; அப்பா என்றென்றும் அதிசயப் புத்தகம்; அப்பா என்றால் அன்பின் அடைக்களம்; அப்பா என்றால் அருமைப் பெண் குழந்தைக்கு அரிய பொக்கிஷம்; ஆண் குழந்தையிடம் அன்பை நேரடியாகக் காட்டத்தெரியாத அடிமைக் கைதி அப்பா; அப்பாவின் தோளில் அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பதே தனி அலாதி; அப்பா என்று வாய்விட்டு கதறினால் பிறக்கும் அசுர பலம்; அன்புக்குழந்தைகளின் உள்ளத்தில் வாழும் வில்லங்கம் இல்லாத வில்லனாகிய ஒரே நாயன் அப்பா. வயிற்றில் சுமக்கவில்லை என்றாலும் வாழ் நாள் முழுவதும் நமக்காக வலியைச் சுகமாய் சுமக்கும் ஒரே சுமைதாங்கி அப்பா; விழியாய் இருந்து காப்பவர் அப்பா; விளக்காய் சுடர் விடுபவர்; வழி தடுமாறிச் சென்றிடாது காக்கும் வழி காட்டியே அப்பா; சிடு சிடு என்று பேசினாலும் சிறு குறையும் வைக்காதவர்; கடு கடு என்று கண்டிப்பாய் இருந்தாலும், காத்திட கடமையைச் செய்பவர் அப்பா; நாம் கன்னியமாய் வாழ தன்னையே காணிக்கைத் தந்தவர் அப்பா; அப்பா என்றால் வெறும் வார்த்தையில்லை, வலிமை; வளியாய்(புயலாய்) தீப ஒளியாய் சுற்றி சுற்றி வருபவர், வார்த்தைகள் பல பேசாவிடினும், வாழ்ந்து காட்டுபவர் அப்பா; நம்மை வாழ வைப்பவர் அப்பா; வாழ்த்தியே பெருமைப் பெறுபவர் அப்பா; அப்பா என்றால் வாய் வார்த்தையில்லை வைராக்கியம். அப்பா என்றால் வாழ்க்கைத் தத்துவம்; அப்பா என்றால் வழிகாட்டி. அப்பா என்றால் ஒளிகாட்டி. முன்னே நம்மை நடக்க வைத்து ஆர்ப்பரிக்காது, அலட்டாது, நம் முன்னேற்றத்தை அமைதியாய் பார்த்து ரசிக்கும் ஒரே ‘ஜூவன்’ அப்பா. தந்தையவர் எல்லாவற்றையும் நமக்காகத் தந்தவர் அவர். தந்தார் தந்தார், தன் உடலைத் தந்தார் உயிரைத் தந்தார், உடமைகளைத் தந்தார்; தந்ததனால் தந்தே தந்தையும் ஆனார். கல்லாய் கல்லாய் நிற்பார்; கடமைகளைச் செய்வார்; சொல்லாமல் தருவார்; சொல்லியேத் தருவார்; உலுக்கல் உழகில் வாழ இழுக்கல் உடையூழி[வழுக்கும் சேர்/சகதி] ஊன்றுகோலாய் நிற்பார்; உண்மை உலகைக் காட்டுவார், அவரே அப்பா. வேர்வையைச் சிந்துவார்; வேதனையை சுமப்பார்; வேண்டாத பொருளாய் ஒதுக்கப்படுவார்; ஆனால் நாம் விரும்பியதை வாங்கித்தருபவர் அப்பா. தந்தையாய் நின்று தருவார் வித்தைகள் பல; தண்டிக்கவும் செய்வார்; கண்டிப்பாய் இருப்பார் கடமைகள் செய்ய கற்றுத்தருவார்; கனிவாய் இருப்பார்; கண்கலங்க வைப்பார்; குடும்ப சுமைக்கு நடுவில் சுகமாய் நம்மையும் தூக்கி சுமப்பார்; தனக்கென எதையும் வைத்துக் கொள்ள மாட்டார் தந்தே தந்தே தந்தையும் ஆனார். குறைதெரியாது வளர்ப்பார்; குற்றம் செய்தால் தண்டிப்பார்; கடனை உடனையாவது வாங்கி கண்ணும் கருத்துமாய் காப்பார்; கஷ்டத்திலும் கண்ணீர் வடிப்பது தெரியாது மறைப்பார்; அன்பை அப்பியே பூசி வளர்ப்பதால் அப்பாவும் அப்பாவி ஆனார்; கவலையை வெளியில் காட்டாது கவனமாய் இருப்பார்; ஓட்ட சைக்கில் தான், ஓரு பக்கம் சரிய மூச்சிக் காத்தை வாங்கியே, மிதித்து நம்மை சுமந்து செல்வார்; சுமை தாங்கிதான் அப்பா; சுமையை சுகமாய் நினைப்பார்; அப்பாவின் தியாகம் அது சுமக்கும் பல சோகம். அதை நினைத்தால் வடிக்குமே மழையாய் கண்களும் ; பிஞ்சு மனசில பிசினாட்டம் ஒட்டியவர் அப்பா; பேச நேரம் இல்லாவிட்டாலும் பேர் சொல்லும் பெருமையை சுமப்பவர் அப்பா; மெழுகு கரையும் வரைதான் ஒளிரும்; மேனி இருக்கும் வரை ஒளிர்பவர் அப்பா; எத்தனை வதைகள், எங்கெங்கோ இழிவுகள்; எல்லா வற்றையும், மௌனமாக நமக்காக சுமப்பார்; போட்டி உலகத்திலே போராடி போராடி காப்பாற்றும் அறக்காவலர்; பொல்லாத உலகம் கொடுத்ததெல்லாம் இல்லாமைப் பட்டம். பொத்தி பொத்தி வளர்ப்பார் புத்திமதி போதிப்பார்; இரவுல வந்து எழுப்பியே கொடுத்த, ஒரு வாய் சோற்றில் அப்பாவின் பாசம் வடியும்; கட்டாத வயிற்றிலே, கால் கஞ்சி குடிச்சிவிட்டு வம்பாக பல வேலை வீம்பாக செய்வார். மஞ்சப்பை பாசம், மனசுல வீசும்; மாடாய் உழைத்து ஓடாய் தேய்பவர் அப்பா; உழைத்தே குடும்ப பாரத்தை சுமப்பார், உளியாய் இருந்து நம்மை செதுக்குவார். சுமைதாங்கியாக அப்பாயிருக்க சுகமாய் நாம் வளர்வோம்; இடிதாங்கியாக அவர்யிருக்க, இரவும் பகலும் இன்னல்கள் இடையூறு தெரியாமல் நாம் வளர்வோம்; வேராய் இருப்பார், வேர்வை சிந்தியே வெயிலிலும் காய்வார்; உடலை வருத்தி உயிரை நமக்காகத் தருவார், நம்மைக் கரைசேர்க்க தன்மானத்தைத் தள்ளியே வைத்து நம் மானத்திற்காக கடன் வாங்கியே பிழைப்பார்; ஏணியாய் இருப்பார் ஏற்றி விட்டே மகிழ்வார். கண்டபடி திட்டினாலும் கதைகள் ஆயிரம் கூறுவார்; அப்பா என்றால் அற்புதம், அப்பா என்றால் அடைக்கலம், அப்பா என்றால் பேரானந்தம். சிறுவயது நினைப்பு இது; பருவம் மாறினாலும், உருவம் மாறினாலும், அப்பாவின் மேல் கொண்ட பயத்தில் மிரளும் நம் கண்கள் இன்னமும் சொல்லும் அவர்மேல் கொண்ட பயத்தை; எங்கே போய் சொல்லுவோம் அப்பாவின் ஏக்க அன்பை. அய்யா என்றால் அத்தியாயம்; அய்யா எங்கய்யா எங்களுக்கே அய்யா; எல்லாத் தொல்லைகளையும் எங்களுக்காக தாங்கிய அய்யா; தூங்கிய நேரம் சிலமணிகளே அய்யா; சிறுத்தையாய் சீறினாலும் சிரிக்க வைப்பவர் அய்யா; அய்யனாய் இருப்பார்; அய்யனாராய் காப்பார்; அதிசயப்பிறவியே அய்யா. நீ படிக்காத மேதையய்யா; தான் துயரைச்சுமந்தாலும் நாம் உயரும் உயரத்தைப் பார்த்தே பெருமை பேசியே புத்துயிர் பெருபவர் அய்யா; வெளியில் முரடணாகத் தெரிந்தாலும் வெள்ளந்தி அவர். வெயிலுக்கு நிழலாவார்; வேதனைக்கு இதமாவார் வேலியே அவராவார். விலைமதிப்பற்ற மாணிக்கமே அவராவார். அப்பா நம் அப்பா நமக்கே அப்பா, நம்யாவருக்கும் ஹீரோதானப்பா; எத்தனை உறவுகள் வந்தாலும் என்றென்றும் நம் முதல் எழுத்தாய் நிற்பவர் அவரப்பா நம் அப்பா, நம் யாவருக்கும் தங்க அப்பா. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை; தாய் தந்தையைத் தாண்டி தெய்வமில்லை; தந்தையின் பாசத்தில் பயம் இருந்தாலும் பேதம் இல்லை; தந்தையைப்போல நமக்கு பாதுகாவலர் யாரும் இல்லை, தந்தைசொல் தவிற வேறு வேதம் இல்லை; தந்தை சொல்படி நடந்தால் நமக்கு சோகமே இல்லை. தந்தையர் தினம் தரும் தன்நம்பிக்கை தன்னையே அர்ப்பணித்த தந்தையை, “தந்தையர் தினத்தன்று” சிரம் தாழ்த்தி இரு கை கூப்பி இதயபாபூர்வமாய் அவர் புகழ் பாடி வணங்கியே வாழ்த்துவோமே. தந்தையர் தினத்தன்று காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ.முத்துவேழப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media