மூணு கண்ணு நுங்கு வண்டி மூணு கண்ணு நொங்கெடுத்து, மூங்கிக் குச்சால அச்சி செய்து, முழு நீல குச்ச பிடிச்சி, அரைஞான் கயித்தில அரைக் கால்சட்டையை முடிஞ்சி வைச்சி, முழு வயித்த முன்னே காட்டி, முழநீள சாட்டைய கட்டி, முன்னே பிடிச்சி ஓட்டி வந்த மூணு கண்ணு நொங்கு வண்டியிது; முந்தி முந்தி ஓடும் இரண்டு காலு வண்டியிது; மேடு பள்ளம் தெரியாது; மேலும் கீழும் சாஞ்சி வரும்; எங்க ஊரு ரதத்தப்போல சாஞ்சி சாஞ்சி ஓடும் வண்டியிது. சட்டுன்னு திரும்பாது, சட்டி பானையை கவித்தி வைத்ததுபோல இருந்தாலும் சட சடன்னு ஓடும் வண்டியிது. சவால் விட்டால் ஜெயிக்கும் வண்டியிது; பாதையபாத்து ஓடாது; பாரம் சுமக்கத் தெரியாது; பாஞ்சி ஓடும் வண்டியிது; பணம் காசு தேவையில்லை; பட்டிக்காட்டை சுத்திவரும் வண்டியிது; பயப்படாம ஏறினால் பத்திரமா ஊட்டுக்கு கொண்டுபோய் விடும் வண்டியிது; குத்தி உக்கார முடியாது; குடு குடுன்னு ஓடிவந்தே ஒருவருக்கு பின் ஒருவர் பிடித்தே சவாரி செய்யனும்; ஓட்டமா ஓடிவந்தா ஓட்டப்பந்தயத்தில ஜெயிக்கலாம்; பட படன்னு ஓட்டிவந்தால் பாட்டுப் பாடியே கல கலன்னு சிரிக்கலாம். பந்தையம் வைத்தால் பாய்ந்தோடும் வண்டியிது; பம்பரமா சுத்திவரும் வண்டி, பாதையிலே தடையா கல்லு கிடந்தால் தள்ளிவிட்டு போகும் வண்டி; ஊருகாடு சுத்திவரும் உயரமா இல்லாத வண்டி; ஒரசி ஒரசி போகும் வண்டி; டீசல் பெட்ரோல் தேவையில்லை; பாய்ந்து பாய்து ஓடும் வண்டி; பாசமுள்ள வண்டியிது; எரிபொருள் தேவையில்லை ஏரி சவாரி செய்யத் தேவையில்லை ஓடி வந்தா போதும் ஓட்டுனரும் காசு வாங்க மாட்டாரு கூட்டியே செல்லும் பாசக்கார வண்டியிது. லைசன்சும் தேவையில்லை இத பிடிக்க போலீசு மாமாவும் வர மாட்டாரு; ஆடி ஆடிப்போனாலும் ஆடியோ காரபோல பென்சு காரப்போல சொகுசான வண்டியில்ல ஆனா ஆபத்து இல்லாத வண்டியிது; விபத்து ஆகாத வண்டியிது; நிதானமாக போகும் வண்டி நிருத்துக் கட்டை இல்லாத வண்டி; பலசான வண்டியிது, பழுது பார்க்கத் தேவையில்லை; ஓடி ஓடி தேஞ்சி ஓரம் கட்;டியே வாதம் வந்ததுபோல ஓடும் வண்டியிது ஓட்டுபவர் டவுசர அவுத்து விட்டு வாய்பொலந்து சிரிக்க வைக்கும் வண்டி இது. அச்சாணி ஒடஞ்சா அச்சச்சோ என்று பயப்படவேண்டாம்; அதிசயமான வண்டியிது அடுத்த நிமிடமே அடுத்த குச்ச மாட்டி எடுத்தே இழுத்துச் செல்லலாம்; செல்லமான வண்டியிது செலவு வைக்காத வண்டியிது; சேவை செய்யாது, சேட்டைசெய்யவே பிறந்த வண்டியிது ராட்டணமா சுத்தினாலும் ரோட்டைப் பார்த்து ஓடாது. கம்மாக்கரைய காலர சுத்திவரும் வண்டியிது; காலுல முள்ள குத்த வைத்தே காயப்படுத்தும் வண்டியிது; கடைசியா நான் பார்த்து வெகு நாளா ஆச்சி. காணம போன வண்டியிது; கைபேசி காலத்திலே கைய விட்டு போன வண்டி. கால ஓட்டத்திலே கண்ணுக்கு புலனாகாமல் போன வண்டி; பாசமா வச்சி விளையாடிய வண்டி, பாலப்போன நாகரீக மோகத்திலே பயந்தே ஓடிய வண்டியிது. வயக்காடு சுத்தி வந்த இடமெல்லாம் கட்டிடமா மாறி போச்சி; வாய்க்கா வரப்பு வாழத்தோப் பெல்லாம் மாயமா மறஞ்சி போச்சி; தட தடன்னு ஓடிய தடமெல்லாம் தார்ரோடா மாறிபோச்சி; தள்ளி தள்ளி ஓடி வந்த இடத்திலே இப்போ படபடன்னு பேருந்தும் இருசக்கர வாகனமும் காரும் பாய்ந்து ஓடுது. தேடித் தேடி பார்க்கிறேன், மாயமா மறைஞ்சு போன தடயமும் தெரியலே; பார்த்தவர் யாராது இருந்தால் தகவல் கொடுக்கவும்; தெரிந்தவரோ தெரியாதவரோ யாராவது எடுத்து இருந்தால் அந்த வண்டி உ டைமையாளரிடம் கொண்டு வந்து பத்திரமா சேர்த்துடுங்க. காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.