மனமே மனமே கலங்காதே; மனமே மனமே கலங்காதே மனமே மனமே கலங்காதே; மனசுக்குள்ளே வைத்தே புழுங்காதே; மலைபோல் நம்பியவன் ஏமாற்றினாலும் கண்ணீர் விட்டு கதறாதே; மனமே மனமே கசியும் மனமே கண்டதையும் செய்தே கசங்காதே; கண்மூடித்தனமாய் நடக்காதே; மனமே மனமே மாயை உலகில் மயங்காதே; வாழ்க்கை என்பது வழக்கு நிறைந்தது, வழுக்கியும் விடுவது, விலங்காய் மாறாது , விளக்காய் ஒளிர்ந்து விரும்பியே வாழ வழிவிடு; மனமே மனமே மயங்காதே; மனமே மகிழ்ந்திரு; மனம்போல் வாழாதிரு; நிஜங்கள் இல்லா வாழ்வில் நிழலாய் தொடர்வதை விடு; வசந்தமும் வந்திடும் மகிழ வைத்திடும்; மனதில் நிம்மதி பெறு. வருத்தமும் வந்தேபோகும் விருந்தாளி; தந்தே போகும் சோகத்தை; துறத்தியே வந்திடும்; துடி துடிக்க வைத்திடும்; கலங்காதே தயங்காதே; மனமே மனமே உவந்திடு உயிரோடு வந்த உடல் உறவாடி பிரிந்தே போய்விடும், உண்மையாய் நடந்திடு. மனமே மனமே பாவத்தை விதைக்காது இருந்திடு; பாவியாகாது இருந்திடு. அப்பாவியாய் அடப்பாவியாய் இல்லாது இருந்திடு; மனமே மனமே பயத்தை மூட்டாதே; பயனற்றச் செயலைச் செய்யாதே; இருமுகம் காட்டாதே; இன்முகம் காட்ட மறவாதே. மனமே மனமே இறுமாப்புடன் இருக்காதே; இறுக்கமாய் இருக்காதே; இரக்கம் காட்ட மறக்காதே. இன்முகமும், துன்முகமும் கொண்ட மனமே; இடிந்துபோகாதே; இதயத்தைக்கீறி ரணப்படுத்தாதே. நன்மனமே, நல்லதையே நினைத்திடும்; துர்மனமே துன்புறுத்த நினைத்திடும்; மறைந்தே வாழ விரும்பும் மர்ம மனமே, அசிங்கத்தை கழுவிடு; அதர்மத்தை தடுத்திடு; தர்மத்தை தொழுதிடு; புறையோடிய மனமே புழுவாய் துடிக்காதே; மனமே மனமே மனக் குப்பையை சுமக்காதே. மனமே மனமே கண்ணுக்கு தெரியாத நீ; கற்பனையில் மிதக்காதே; கன நேரத்தில் காத தூரம் சுற்றி வரும் மனமே; நிதானம் தவறாதே, நீலிக் கண்ணீர் வடிக்காதே; அல்லவைகளைத் தவிர்த்து நல்லவைகளை நினை மனமே; உள்ளதைவைத்து உள்ளத்தில் நிறைவு பெறு மனமே. மனமே மனமே; நம்பிக்கையை இழக்காதே; நம்பிக்கை துரோகம் செய்யாதே; நம்பியவனை பழிதீர்க்கத் துடிக்காதே மனமே; ஞானத்தை, மானத்தை இழந்து பெற நினைக்காதே மனமே; மனம் விட்டுப் பேசாது, மானத்தை விட்டுப் [விற்று] பேசாதே மனமே. மனமே அன்புக்கு சுமைதெரியாது , ஆசைக்கு எல்லை கிடையாது அசிங்கத்திற்கு வெட்கம் தெரியாது முயற்சிக்கு முடிவு கிடையாது மூச்சி நின்றவுடன் பேச்சிக்கு இடம் கிடையாது; மனமே அமைதிக்கு மெளனம் சாதிக்கத்தான் தெரியும் ; பண்புக்கு சுகம் தெரியாது மனமே; பணிவுக்கு குரோதம் விரோதம் தெரியாது மனமே; ஆணவப் பாதை அழிவுப் பாதை மனமே; ஆணவத்தை ஒழி மனமே. எழுதாத கணக்கு அழுதாலும் வராது மனமே; வலுவான கரங்கள் நழுவாது மனமே; தொழாத கரங்கள் எழாது மனமே; சமரசமாகப் போனால் சண்டை சச்சரவு இல்லை மனமே; மனமே, முகமூடி இல்லாது முழுதாய் ஒழிந்து வாழும் அருவ மனித மனமே அசிங்கத்தைச் செய்ய நினைக்காதே; அகந்தைபிடித்துத் திரியாதே; அகத்திற்குள் அமர்ந்து அடம் பிடிக்காதே; புகையும் மனமே பகையைத் தூண்டாதே; கூடா நட்பு கேடாய் முடியும் மனமே; நொடிக்கு நொடி மாறும் மனமே; நொந்தே சாகடிக்காதே; தொனத் தொன என்று சீண்டாதே தொல்லைகள் பல தறாதே; கண்ணுக்கு தெரியாத மனமே கண்ணீர் வடிக்க விடாதே; உண்மையை அறிந்து வாழ்ந்தால் உலக வாழ்க்கை இனிக்கும்; நன்மைகள் செய்தால் நல்லதே நமக்கு நடக்கும்; கண்டபடி திரிந்தால் கண்ணீர் தான் வடிக்க வேண்டும். மனமே மனமே கலங்காதே வேசத்தை மாற்றி மாற்றி போட்டே வேவு பார்க்காதே; வேதனையைக் கூட்டி வெறுக்க வைக்காதே: பொறுத்துப்போனால் பெருமை வந்து சேரும்; பொறாமை பிடித்துப் போனால் பொசுக்கியேப்போடும்; மனமே மனமே ஏவி விட்டு சதிசெய்யாதே; அழுக்கை சுமந்து புழுங்கி வாழ நினைக்காதே; மனமே மனமே தோல்வியும் வேள்விதான், துணிந்தே செயல்படு ஜெயம் உனக்கே மனமே; அழுக்குக்குள் அமுங்கி, புழுங்கி, இழுக்கை செய்யும் ஈனபுத்தி கொண்ட மனமே, பேராசை பிடித்துத் திரியாதே; நினைவுகளைச் சுமந்து நிந்திரையின்றி தவிக்கும் மனமே நிதானத்தை இழக்காதே; நீ தானத்தை தர்மத்தை மறக்காதே; நியாயமாய் நடந்திடு. மனமே மனமே ஒவ்வாததை செய்யத் தூண்டாதே; ஒழுக்கங் கெட்ட செயலைச் செய்யாதே, ஓயாது புழுங்கித் தவிக்காதே. மனமே மனமே ஒழித்தே வாழும் மர்ம மனமே, இதயத்தை சிறையாக்கி, இன்ப லீலைக்கு இரையாகாதே; இருப்பதை வைத்து வாழாது, தவறுக்குமேல் தவறைச் செய்யத் தூண்டாதே; மனமே மனமே சோகத்தை சுமந்து சோர்வடையாதே; சின்னச் சின்ன ஆசைகள் சிறகடித்து பறக்கட்டுமே; சிரித்துப் பழகியே சிந்தையைச் சிதைக்காது சிறப்பை செதுக்கட்டுமே; வண்ண வண்ண எண்ணங்கள் வந்தே போகட்டுமே: வன்மம் இல்லா வாழ்வை அமைக்க உதவட்டுமே; மனமே மனமே தோண்டத் தோண்ட அசிங்கங்களையும், அருவருப்பையும் புதைத்து வைக்கும் புதைகுழி யாகாதே; உண்மையை மறைத்து மதிகெட்டுத் திரிய விடாதே; ஊமையாய் இருந்தே ஊம குசும்பு பல செய்யாதே; உள்ளே இருந்தே கெடுக்காதே; உறவாடியே பகைக்காதே; உளவுவேலை செய்தே; உருப்படாமல் போக வைக்காதே. மனமே மனமே மன உலைச்சல் மனிதனுக்குத் தரும் பெரும் குடைச்சல். மனமே மனப்புகச்சலால் எரிக்கின்றாய்; மனம்போல் நடக்கின்றாய் ஓயாது தவித்துக்கொண்டே இருக்கின்றாய்; சதா உளவு பார்க்கின்றாய்; கண்ணுக்குத் தெரியாத கயவன் நீ. கல்மனம் கொண்டவன் நீ; ஆசைத் தீயில் கருகின்றாய், ஆகாயத்தில் கோட்டை கட்டுகின்றாய்; தவறுகளைச் செய்து தண்டனையும் அனுபவிக்கின்றாய்; மனமே மனமே தள்ளாமையில் தனிமையில் நடு நடுங்குகின்றாய்; செய்த தவறுகளை எல்லாம் நினைத்து துடி துடிக்கின்றாய்; ஓட்டம் ஆட்டம் காட்டி தவிக்காதே; மனசாட்சியை கொலை செய்யத் துடிக்கும் ஆணவ மனமே அடைக்கலம் தேடு; ஆடியது போதும் ஓட்டம் காட்டுவதை விடு; மனமே மனமே ஏழையாய் இருந்தாலும் கோழையாய் வாழாதே; இறுக்கத்தோடு இருக்காது இரக்கப்படு. சஞ்சலமும் சந்தேகமும் நோகடித்தே சாகடிக்கும். சந்தோசத்தை இழந்து விடாதே, ஆவேசம் கொண்டு எழுந்திடாதே; எழுச்சி பெறு; மனமே மனமே குரங்காகத்தாவாதே; குணம் கெட்டுத்திரியாதே; குழந்தையாய் சிரித்துப்பழகு; குதூகலம் தானாய் பிறக்கும். மனமே மனமே நீயும் துக்கத்தை பக்கத்தில் வரவிடாதே ; தூக்கத்தை விட்டு ஏங்கி தவிக்காதே; வெட்கத்தை விட்டு சொர்கத்தை தேட நினைக்காதே; விரோதங்கள் தேடி பகையை மூட்டி பயந்து வாழவைக்காதே; பாவம் என்னும் சாயத்தை பூசாதே, பவித்திரமாய் வாழ வழி தேடு; தீயவழியில் சென்று தீஞ்சிப்போகாதே; தீது என்று அறிந்தவுடன் திரும்பிப் பார்க்காமல் ஓடிடு; மனமே மனமே மரண பயத்தை மனதில் சுமக்காதே; உண்மையை ஊமையாக்காதே; உள்ளத்தை தவிக்க விடாதே. நன்மைசெய்ய மறக்காதே. மனிதா அறிந்து கொள், உள் மனம் உன்னையே வீழ்த்தும் ஆயுதம்; அச்சம் பயமும் அண்டிக்கிடக்கும் மனச் சிறைதான் உன் உள்மனம்; மனிதா நல்ல மனம் வாழும்; அமைதியை காக்கும்; அகந்தையை ஒழிக்கும்; அன்பைச் சொரியும்; நம்மை நல்மனிதனாக்கும் நன்மனம் நறுமணம், அன்பு பொறுமையும் சுமந்து பெருமை சேர்த்து மணக்கும் இந்தமனம்; அகந்தை பிடித்து அழிக்க நினைக்காது, இரக்கத்தைத்தேடு; மனிதப் பண்பை நாடு. ஈரமனம் இதயத்தை தொடும்; இரக்கம் காட்டும்; ஈர்க்கும் நேசம். அடக்கிபார்க்கும் ஒரு மனம்; அடங்கிப்போகும் ஒரு மனம்; முடங்கிப்போகும் ஒரு மனம், முடக்கிப் போடும் ஒரு மனம், வேண்டாம் வேண்டாம் வன்மம் , வேண்டியே பெறட்டும் கருணை உள்ளம்; நன்மையையே பயக்கட்டும் நல்ல மனம்; நல்ல மனம் இது நறுமண(ன)ம்; நல்ல சிந்தனையை விதைக்கட்டும் இந்த மனம்; இரக்கம் சுரக்கட்டும்; கருணை பிறக்கட்டும்; மனித நேயம் மலரட்டும், இதயத்தில் அன்புமழை பொழியட்டும்; இளகிய மனம் இது என்றென்றும் இனங்கும் மனம்; இது வணங்க வேண்டிய மனம்; அஞ்சிட வேண்டாம் உன்மனம்; நஞ்சிட வேண்டாம் நல்மனம்; நஞ்சாக வேண்டாம் நம் மனம்; வஞ்சகனாக வேண்டாம் உள்(ன்)மனம்; நன்மனத்தோடு நல்ல உள்ளங்களைத் தேடு; உள்ளத்தை தவிக்க விடாதே; உள்ளத்தை உள்ளபடி செய்ய மறக்காதே; உண்மையை ஊமையாக்காதே. மனமே மனமே நல்லதையே நினை நாளும் நலம் பெரு; நாடும் வளம் பெரும். மனமே மனமே மறவாதே; அபயம் என்று வந்தவனுக்கு, உபத்திரம் தறாது, உபயம் செய்ய உள்ளன்போடு அடைக்கலம் தந்திடு.
Chennai, Tamil Nadu, India.