விழுந்து கிடந்ததுபோதும் தம்பி; எழுந்து வாடா தம்பி; விடியலும் எழுந்துடிச்சி; விடைதேடி ஓடு தம்பி; விழுந்து கிடந்தால் வாழ்வேது தம்பி; வாழ்ந்து காட்ட புறப்படு தம்பி தம்பி; வாழ்க்கை என்பது ஒரு முறைதான் வந்தே போகும் வழிப்பயணம் தான், வழக்கெதற்கு தம்பி. வாழ்ந்தோம் இருந்தோம் போனோம் என்று இருக்காது, வாழ்வேன் சாதிப்பேன் என்றே இக்கணமே சபதம் எடு தம்பி; வாழ்ந்து காட்ட பலவிழிகள் உண்டு, வாழ்ந்து கெடவும் சில வழிகள் உண்டு, வாழ்ந்து கெடாது வாழ்ந்து காட்டு தம்பி. சூரியனும் சுட்டெரிக்காது சுகம் நாடினால், சுழலும் பிரபஞ்சத்தில் கோள்கள் ஏது தம்பி; சுற்றி வரும் பூமி நின்று விட்டால் சூணிம் தானடா தம்பி; கொட்டும் மழையும் கொட்டித் தீர்க்காவிட்டால், சொட்டுத் தண்ணீரும் இல்லையடா தம்பி; கொட்டும் கண்ணீரும் கட்டும் சோகமும் தான் மிஞ்சுமடா தம்பி; கட்டி அழுதால் மட்டும் கவலைகள் தீராது தம்பி; கவனமாய் கட்டுப்பாடோடு வாழ்ந்தால் கவலைகளும் கண்டு கொள்ளாது போகும் தம்பி; ஒட்டிப்பார்க்கும் ஒப்பனையும் ஒரு சில நேரம் தான் ஒட்டும் தம்பி; கற்பனை கண்டாலும் கனவுலகத்தில் வாழ நினைக்காதே தம்பி; கட்டிக்காக்க வேண்டியது மானம் தான் தம்பி; கண்டபடி வாழ்ந்தால் கட்டுப்பாடு இருக்காது தம்பி; கடமை கண்ணியம் கட்டுப்பாடு வாழ்வில் வேண்டும் தம்பி; காட்டாற்றை கட்டிப்போட நினைக்காதே தம்பி; காத்து இருப்பவன் தோற்றது இல்லை தம்பி; காத்தே இருப்பவன் வென்றதும் இல்லை தம்பி; காற்று இருக்கும்போதே தூற்றிக்கொள்ளாதவன் சாமர்த்தியக்காரன் இல்லை தம்பி; சாதிக்க சதியையோ சாதியையோ துணைதேடாதே தம்பி; சகதியை பூசிவிட்டு சந்தனம் என்று கூறாதே தம்பி; ஜான் ஏறி முழம் சருகுது என்று சாய்ந்து கிடக்காதே தம்பி; முழங்கால் இட்டு கதறாது முழத்தையும் முயற்சியால் முழு மூச்சுடன் தாண்டு தம்பி; சாணிக்கு இருக்கும் மதிப்பு சாக்கடைப் புழுவுக்கு கிடையாது தம்பி; சானியை(மனைவி) சாணியாய் நினைக்காதே தம்பி; சனிப்பெயர்ச்சியை நம்பி சாதனையை தள்ளிப்போடாதே தம்பி; கட்டழகு குறைந்துவிட்டால் கடன் வாங்க முடியாது தம்பி. காட்டும் பாசம் கரைந்து விட்டால் காட்டுமிராண்டி தானடா தம்பி; கண்மூடித்தனமாய் செயல்படாது, கண்ணும் கருத்துமாய் செயல்படு தம்பி; தீயை பிடிக்க நினைக்காதே தம்பி; தீதை செய்ய நினைக்காதே தம்பி; திரும்பிப் பார்க்காதவனும் திருந்தி வாழாதவனும் திருப்தியாய் வாழ்ந்தவன் இல்லை தம்பி; வருந்தி கிடப்பவனும் வயிர்ரெரிச்சல் பட்டுக் கிடப்பவனும் வாழ்ந்து சாதித்தது கிடையாது தம்பி. வழிதெரிந்து கொள்ள வலியையும் சுமக்க பழகிக்கொள் தம்பி; வலியைவிட வழிந்தோடும் பாசம் வலியது தம்பி; பலிபாவத்தை சுமக்காதே தம்பி; பயத்தை சுமந்து பலியாடாகாதே தம்பி; பணத்தை தேடுவதை விடுத்து பயனைத் தேடு தம்பி. பண்பாட்டில் வேண்டும் உடன்பாடு தம்பி; பண்பை மறந்தவனும் அன்பை மறந்தவனும் நெறிகெட்டவன் தான் தம்பி; நன்றி கெட்டவனும் நன்றாய் கெட்டவனும் ஒன்றுதான் தம்பி; அதிகாலை எழுச்சியை ஆர்வத்துடன் எழுந்து ஆதவனின் உதயத்தைப் பார் தம்பி; ஆண்டவன் இருக்கின்றானோ இல்லையோ, மாண்டவன் திரும்புவதில்லை, எனவே அண்ட வந்த புவியை காத்திட விரைந்திடு தம்பி. கட்டலையில் கட்டாயமாய் பிறக்காது நேசம் தம்பி; கட்டழகை கட்டி ரசிக்க நினைக்காதே தம்பி; கண்டபடி வாழாது கண்ணியமாக வாழ்ந்து காட்டு தம்பி. பகிழகம் என்றும் மகிழகமாக இருக்கவேண்டும் தம்பி; பழிகொடுக்கும் இடமாக இருக்கலாகாது தம்பி. வானம் சுரக்க மறந்தால் வரட்சிதான் தம்பி; மனம் சுரக்க மறந்தாலும் வரச்சிதான் தம்பி; மானம் சுமக்க மறந்தால் வீழ்ச்சி தான் தம்பி. பத்தி வைக்கும் தீயைவிட வத்தி வைக்கும் வதந்தித் தீ வேகமாய் விரு விரு என்று பரவும் தம்பி. அநாவசியமாய் எதையும் செய்யாதே தம்பி; அநாகரீகத்தை நாகரீகம் ஆக்காதே தம்பி. எதையும் சந்திக்கும் முன் சிந்தித்துப் பார் தம்பி; அடங்கி வாழ்பவனும் முடங்கி வாழ்பவனும் அடிமைதான் தம்பி. காலம் தரும் பாடம் என்று கனத்த இதயத்தோடு தோய்ந்து போகாது, காலால் மிதிக்கவும் பழகடா தம்பி. காத்திருந்து காத்திருந்து காத்திருக்கும் பட்டியலில் இடம் பிடிக்காது, காலத்தில் எதையும் செய்ய துணிந்திடடா தம்பி; காது கேட்டும் காது கொடுத்து கேட்காதவனும், காது கேட்காத செவிடனும் ஒன்றுதான் தம்பி. காட்டை அழித்து விட்டு, காற்றைத்தேடித் திரியாதே தம்பி. கண்டவனுக்கும் காட்டும் கருணையை கட்டியவளிடமும், பெற்றதாயிடம் காட்டு தம்பி. கழனியை கட்டாந்தரையாக்கி விட்டு, கண்ட நீரை காணாக்கிவிட்டு, கழிவு நீரை மறுசுழட்சி செய்யும் நீ, வரும் துயரை வளரவிட்டு, பெரும் துயருக்கு தயாராகுவதும் ஏன் தம்பி. ஒழிவு மறையில்லா வாழ்வை விட்டு, ஓலம் இட்டபடியே ஒழிந்து வாழுவதும் ஏன் தம்பி. ஆக்கத்தை அழிவில் தேடாதே தம்பி; ஊக்கத்தை உறக்கத்தில் தேடாதே தம்பி. கெட்டவுடன் ஞானம் பெற விரும்பாதே தம்பி; கெட்டதை கெட்டது என்று அறிந்தும் கெட்டிக்காரத்தனமாய் செய்ய நினைக்காதே தம்பி. விட்டதை விட்டுவிட்டு வேண்டாததை விரட்டிச் செல்லாதே தம்பி. வீடைகட்டி விட்டு , பீடையை சுமக்காதே தம்பி; மனவீட்டில் கூடை கூடையாய் குப்பையை சேர்க்காதே தம்பி. நல்லநேரம் தேடி நல்லதை செய்வதை தள்ளிப்போடாது, நினைத்தது நடக்க, நல்லதை நினைத்து, நல்லபடி நேரத்தில் நேர்த்தியாய் செய்ய வேண்டும் தம்பி. கற்பனையில் மிதக்காது, கனவே கண்டிறாது, கைக்கூடும் செயலைச் செய்ய முனையவேண்டும் தம்பி. கடமையைச் செய்ய கையூட்டு வாங்காதே தம்பி; கண்ணிருந்தும் குருடனாய் இருக்காது, கனிவு கலந்த இரக்கம் வேண்டும் தம்பி. புனிதம் என்று புனிதத்தலம் சென்று இறைவனைத் தேடுவதைவிட, புண்ணியத்தில் கண்ணியத்தில் இறைமாண்பைத் தேடு தம்பி. ஆயிரம் வேதம் அறிந்தவனை விட அறியாமை இருளை அகற்ற உதவுபவனே வேத ஞான சொருபி தம்பி. அறிவொன்றே தெய்வம் தம்பி, அதை அறியாமை இருளை அகற்ற வழிபடடா தம்பி. ஆயிரம் ஆயிரம் சாதி மதம் இருந்தாலும், மனிதசாதி தான் நாம் என்பதை மறவாதே தம்பி. நல்ல தன்மானம் இருக்க, கள்ளத் தனம் வேண்டாம் தம்பி; தொலைந்தது தொலைந்ததாகவே இருக்கட்டும் தம்பி; தொடர் கதையாய் தொல்லைகள் இனியும் வேண்டாம் தம்பி. தொடர்வது நல்லதாக இருக்கட்டும் தம்பி. அன்பன். அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.