மண்ணின் தாகம் மழையில் நனைந்து மண்ணீராய் இணைந்து, கொடுத்து கொடுத்தே இனிதாய் தணிகின்றது; மனிதனின் தாகம் அடங்காத மோகத்தால் மோதலாய்மாறி பேராசைபிடித்து, அடுத்து அடுத்து அடித்து அடித்து எடுத்து எடுத்து அடையத்துடித்தே கெடுத்து கெடுத்து அழித்தே தணிகின்றது. குருதியின் தாகம் கொடூர வேட்டை வெறியில் தணிகின்றது; வேர்களின் தாகம் மரம் செடிகொடிகளைத் தாங்கியே தணிகின்றது. வேதனையின் தாகம் சோகத்தை சுமந்தே தணிகின்றது; சோகத்தின் தாகம் சொட்டும் கண்ணீரில் கரைந்தே தணிகின்றது. அலையின் தாகம் அடித்து அடித்து அலைந்து திரிந்து கரையையடைந்தே தணிகின்றது. ஆறறிவுகொண்ட மனிதனின் தாகம் எடுத்து எடுத்து கெடுத்து கெடுத்து கறைபட்டே தணிகின்றது. மேகத்தின் தாகம் கருவுற்று மழையை சுமந்து கொட்டித் தணிகின்றது; மோகத்தின் தாகம் சொட்டித் தணிகின்றது. பனியின் தாகம் குளிரை சுமந்து நடுங்க வைத்து தணிகின்றது; பசியன் தாகம் புசித்தே தணிகின்றது; பணிவின் தாகம் பயன்தேடாது கொடுத்தே குனிந்தே தணிகின்றது. நதியின் தாகம் கொடுத்தே தணிகின்றது; நன்றிகெட்டவனின் தாகம் கெடுத்தே தணிகின்றது. மழையின்தாகம் முழங்கிக் கொட்டி புவியை நனைத்து, பூலோகத்தை காத்து நதியாய் புறப்பட்டு நடந்தே சென்று கடலில் சங்கமித்து தணிகின்றது. மனிதனின் தாகம் முழங்கியே கெடுத்து கொடுத்துப் பழகாமல் கெடுத்துப் பழகி எடுத்துப்பழகி, இறுதியில் சடலமாகி தணிகின்றது. சந்தோசத்தின் தாகம் சந்தேகத்தை சுமந்தே தணிகின்றது. விண்ணின் தாகம் விடியும் பொழுதில் விளக்கேற்றி விரைந்து பகலை அனுப்பி, இரவுப்போர்வையை போற்றியேத் தணிகின்றது. புவியின் தாகம் பூத்து குலுங்கி பசுமைப் போர்வையை போற்றி, இரவையும் பகலையும் உறவாய் சுமந்து, மலைகளை மரங்களை நிலங்களையும் நீர் நிலைகளையும் புல் புழு புச்சி பறவைகள் விலங்குகள் மனிதர்களையும் சுமந்து சுமந்தே தணிகின்றது மனித ஆசையின் தாகம் அடங்காது ஆட்டிப்படைத்து பேராசையால் பெருக்கெடுத்து அழிவில் தணிகின்றது. ஏழையின் தாகம் ஏங்கித் தவித்தே தணிகின்றது. கோழையின் தாகம் குனிந்து குனிந்து தயங்கித் தயங்கி தள்ளி நின்றேத் தணிகின்றது. சிற்பியின் தாகம் செதுக்கிய சிலை உயிர்பெற்ற அழகிய தருணத்தில், மயங்கியே தணிகின்றது. சிலையின் தாகம் தெய்வீகத்தில் தணிகின்றது; சீறிப்பாய்பவனின் தாகம் சினத்தால் சீரழிந்தே தணிகின்றது. நடிகனின் தாகம் கர ஓசையைக் கேட்டே தணிகின்றது நடிப்பவனின் தாகம் ஏமாற்றிப் பிழைத்தே தணிகின்றது; குடிகாரனின் தாகம் குடித்து குடித்து குடல்வெந்து குழிக்குப் போகும்போது கூட ஒரு குவாட்டர் ஊத்திக்கொள்ளவதிலேயே தணிகின்றது. குடித்தலைவனின் தாகம் ஆக்கிரமித்து அடித்து அடித்து அபகிரித்து சுருண்டுபோகும் வரை சுருட்டி சுருட்டியே தணிகின்றது. தீயின் தாகம் தீக்கிரையாக்கியே தணிகின்றது; தீயவனின் தாகம் தீராத தலைவலியையும் தொல்லைகளையும் தந்தே தணிகின்றது. திமிரு பிடித்தவனின் தாகம் எதிர்பார்ப்பு என்னும் வேட்கை வெட்கையிலேயே வெக்கம் கெட்டு தணிகின்றது வறுமையின் தாகம் வெறுமையைத் தந்தாலும் விரும்பியுன்னும் ஒருவாய் சோற்றால் தணிகின்றது; வெறியின் தாகம் நெறிகெட்ட செயலில் தணிகின்றது. வெற்றியின் தாகம் சுற்றிவரும் சோதனையைத்தாண்டி வென்று காட்டுவதில் தணிகின்றது. தணியுமா தாகம் தாங்குமா மோகம் பணியுமா சோகம் தூங்குமா விவேகம் தடுமாறுமா கோபம் அன்னையின் தாகம் அடைக்கலத்தில் தணியுமா; அன்பாய் பழகினால் வம்பில் தான் பாசம் தணியுமா; ஆசையின் மோகம் அழித்துத்தான் தணியுமா; இன்பத்தின் தாகம் மோகத்தில் தான் தணியுமா; ஈன்ற பிள்ளைகளின் மேல் உள்ள தாகம், பிடிவாதத்தால் ஊன்றிய சோகத்தில் தான் தணியுமா; எல்லை மீறிய பேராசையின் தாகம் தொல்லையில் தான் தணியுமா; ஏக்கத்தின் தாகம் துக்கத்தால் தான் தணியுமா; ஐயத்தின் தாகம் தெளிந்தபின்தான் தணியுமா; ஐயய்யோ இந்த அசையின் தாகம் மனிதனை உசுப்பித்துத்தான் தணியுமா; ஒதுங்கிச் செல்லும் மனமே, ஓலமிடுமனமே ஓளடதம் ஆகட்டும் ஆசைகள் புரிந்துகொள். எல்லா எல்லா தாகமும் சொல்லாமல் கொள்ளாமல் எடுத்தே தணிகின்றது . கொடுத்தே தணிந்தாலும் கெடுத்தும் தணிகின்றது; தணியட்டும் வேண்டாத தாகம்; தாங்கட்டும் தீண்டாத தீஞ்சாத தாகம். வெந்து தணியும் தாகம் நொந்து தணியும் தாகம் தணியட்டும்.
Chennai, Tamil Nadu, India.