Blog

நீ யார் நீ யார்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 24/11/2024
  • Category: valkkai
  • Views: 73
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

நீ யார் நீ யார் நேசிப்பவனே நீ யார்; யோசிக்க வைப்பவனே நீ யார்; யாசிப்பவனே நீ யார்; நெருங்கிப் பழகுபவனே நீ யார்; நியாயம் கேட்டு துடி துடிப்பவனே நீ யார்; நிம்மதியற்று புலம்புபவனே நீ யார்; சோகத்திற்கு சொந்தமானவனே நீ யார்; சோர்வுற்று இருக்கும் போது ஆறுதல் கூறுபவனே நீயார்; சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி தொனத் தொன யென அரிப்பவனே நீ தான் யார். அடம்பிடித்து ஆட்டிப்படைப்பவனே யார் நீ; வஞ்சம் தீர்கத் துடிப்பவனே நீ யார்; வாய்விட்டு கதறி அழும்போது வலுக்கட்டாயப் படுத்துபவனே நீ யார்; கனவிலும் கற்பனையிலும் மிதப்பவனே யார் நீ; கவலையைச் சுமந்து கண்ணீரால் நனைப்பவனே நீ யார்; நித்தம் நினைத்து நினைத்து தவிப்பவனே நீ யார்; நியாயம் கேட்க போராடத் தூண்டுபவனே நீ யார்; நிதானமும் தடுமாறுபவனே நீ யார்; உறவோடு ஒண்டியும் இருக்கின்றாய், உறவாடியும் கெடுப்பவனே நீ யார்; உடன் படாது துடிப்பவனே யார் நீ; உல்லாசத்தில் விழுந்து கிடந்து தவிப்பவனே யார் நீ; மாயையாய் மறைந்து கிடப்பவனே, மாயமாய் போனவனே நீ யார்; மயக்கத்திற்கு விருந்தாகி, மதிகெட்டும் திரிபவனே நீ யார்; சோகத்தை சுமந்து சுகத்தை இழந்து சுமையாகித்திரிபவனே நீ யார்; மதிகெட்டச் செயலால் மானம் கெட்டுத் திரிபவனே நீ யார்; சதிக்கு உடந்தையும் ஆகின்றாய், சாதிக்கவும் துடிப்பவனே யார் நீ; சகித்தும் போறவனே; சமாலித்தும் போறவனே; நாகரீகத்திற்கு அநாகரீக முலாம் பூசுபவனே யார் நீ. நீ யார்; நீ யார் என்று கேட்டால் பதிலுக்கு யார் நீ யார் நீ என்று என்னையே கேள்வி கேட்பவனே, நீ தான் யார். நீ யார் நீ யார்; எனக்கு நீ யார்; உனக்கு நான் யார்; என்னை முன்பின் பார்க்காத நீ என்னையே ஆட்டிப்படைப்பவனே, அய்யகோ யார் நீ. போதும் போதும் மர்ம முடிச்சை அவிழ்த்துவிடு, நீடிக்க வேண்டாம் பீடிகை. நிரந்தரமாக வேண்டாம் சோகம். அன்பைத் தேடி அலைய வைக்கின்றாய், நிம்மதியின்றி; உலைச்சலுக்கு ஆளாக்கின்றாய்; சில நேரம் குமுறுகின்றாய்; குளர்படி பல செய்கின்றாய்; அக்கறையிருப்பது போன்று நடிக்கின்றாய்; அது இது என்று சொல்லி சாக்கு போக்கு காட்டுகின்றாய், யார் தான் நீ; துடிக்கவும் வைக்கின்றாய் தவிக்கவும் வைக்கின்றாய்; தனிமையை விரும்புகின்றாய்; தள்ளியும் போகமாட்டேன் என்கின்றாய், தன்மானத் திமிரும் பிடித்துத் திரிகின்றாய்; யாரப்பா நீ. தாவும் குரங்குகள் போன்று இங்கும் அங்கும் தாவுகின்றாய்; தாங்கும் போது தடுமாறுகின்றாய். உன் உற்ற பந்தம் உறவுக்கார பந்தம் என்றால் ஒட்டுகின்றாய் துடிக்கின்றாய்; ஊறார் பந்தமென்றால் நடிக்கின்றாய்; விரும்பினால் வெறுக்கின்றாய்; விரும்பியே வந்தால் ஒதுங்கு கின்றாய்; சதிக்கும் உடன் போகின்றாய்; சகலத்தையும் அடைய விரும்பு கின்றாய். எங்கோ புதைந்து கிடக்கும் நினைவுகளைத் தோண்டி எடுத்து ஏங்க வைக்கின்றாய்; எங்கே இருக்கின்றாய் என்றால் மாயை நான் என்கின்றாய். ஏன் என்று கேள்வி கேட்டால், உனக்கெதற்கு என்று பதில் அளிக்கின்றாய். நான் யார் என்று தெரியாமல் என்னுள்; பதுங்கிக் கிடப்பவனே நீ யார்; பசிவந்தால் பதறுகின்றாய்; பாசம் என்றால் சிதறுகின்றாய்; பகை என்றால் உதறு கின்றாய்; பயத்தில் துடி துடிக்கின்றாய்; பார்க்க வா என்றால், பார்க்கவா என்கின்றாய்; பலிபாவத்தையும் சுமந்தே திரிகின்றாய்; பிடிசாம்பலாய் போய்விடுவேன் நான் என்பதை அறிந்தும், பிடிவாதம் பிடிப்பவனே நீ யார். இதுவா அதுவா அதுவா இதுவா இதுவும் அதுவா அதுவும் இதுவா எது எது என்று தவிப்பவனே நீ யார்; யார் நீ; எங்கு இருக்கின்றாய்; விபரீதங்களோடு விளையாடத் துடிப்பவனே நீ யார்; நீ யார் நீ யார் நீ யார் என்று கேட்பவனே; நீ தான் நான் ; நான் தான் நீ; மனம் நான்; மனம் நான்; உன் மனம் நான்; உன் மனசாட்சி தான் நான்; மலைப்பேன் சிலநேரம்; மறுப்பேன் சில நேரம்; மயக்குவேன் சில நேரம்; மறிப்பேன் சில நேரம் மறப்பேன் சில நேரம்; மதிக்காதவனை மிதிக்கவும் வைப்பேன். உன் கனவுகளுக்குள் உறங்குவேன்; உனக்கு உடந்தையாகவும் இருப்பேன்; மனம் திறந்து பேசவும் வைப்பேன்; நானே தான் உன் மனமும் மனசாட்சியும். மனம் நான் உன் நினைவுகளைப் புதைக்கும் கல்லறையல்ல உன் நினைவுகளை சுமக்கும் கருவறை நான்; மனிதா உன் மௌனத்தை கலை; மனம் திறந்து பேசு; மனசாட்சிக்கு விரோதமாக செயல்படாதே; மறுபடியும் மறுபடியும் உன்னுள் இருந்தே, உன்னை ஆட்டிப்படைப்பேன் மறக்காதே; நீ திருந்தும் வரை திரும்பத் திரும்ப உன்னை நோகடிப்பேன்; ஏதோ என்று எதுவோ என்று ஒதுக்காதே; மனம் நான் மணக்கவும் செய்வேன்; மறுக்கவும் செய்வேன். நீ திருந்தும் வரை திரும்பத் திரும்ப உன்னை நோகடிப்பேன்; பதட்டமாகவும் இருப்பேன்; அதட்டவும் செய்வேன்; படிப்பினையும் தருவேன்; கருணையும் காட்டுவேன். மனிதா நானே உன் ஆழ்மனம், உன்னை ஆளும் மனம்.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media