விலகிப் போகாமல் விளக்கை ஏற்று விடியட்டும் விடியட்டும் விரும்பியே விளக்கை ஏற்று; மடியட்டும் மடியட்டும் மனதனின் பேராசை வெறி; முடியட்டும் முடியட்டும் போட்டிப் பொறாமை; முடிவுக்கு வரட்டும் வரட்டும் வேற்றுமை ஏற்றத்தாழ்வும்; முடிவு கட்டட்டும் கட்டட்டும் வேண்டாத விபரீத விஞ்ஞான வேட்டைக்கு; தீரட்டும் தீரட்டும் கொடுமையாம் பஞ்சம் பசி பட்டினி வறுமையும் பிணியும். திருந்தட்டும் திருந்தட்டும் மனிதனும்; திரும்பி வரட்டும் வரட்டும் அந்த இனிமையும் எளிமையான வாழ்வும். பிறக்கட்டும் பிறக்கட்டும் புதிய விடியல்; புதுப்பிக்கட்டும் புதுப்பிக்கட்டும் பகையை அழித்து உண்மையான நேயத்தை; மீண்டும் அரும்பட்டும் அன்பு பாசம் பற்று. மலரட்டும்! மலரட்டும்! மீண்டும் மனிதநேயம்; மதவெறி மடியட்டும். உருவாகட்டும் உருவாகட்டும், ஒரே உலகில் ஒரு சாதி ஒரு மதம் ஒரே இனமாம், மனித இனம். விடியட்டும் விடியட்டும் பகையேயில்லாத பரஸ்பர சன்மார்க்கமெனும் புதிய விடியல். உனக்கு எனக்கு என்று இல்லாது ஒற்றுமையாய் இருக்க, ஒன்று கூடி உள்ளன்போடு விளக்கை ஏற்று. புரியட்டும் புரியட்டும் ஒவ்வொருவருக்கும் நாம் தனிமையில் இல்லை; தனிமனிதனும் இல்லை, தள்ளி வைக்கப்பட வில்லை என்றும், ஒற்றுமையுடன் இருக்க, ஒருகரமாய் இணைந்தே உத்வேகம் உச்சாகத்துடன் ஒற்றுமை ஒருமைப்பாடு என்ற விளக்கை ஏற்று; நம் இதயங்கள் இணைய, பற்று பாசம் உதயமாக எல்லா நேசக்கரங்களும் இருக்கு என்று விளக்கை ஏற்று. வன்மம் சூழ்ச்சி பகையாவும் மனித இனத்தைவிட்டே ஓட விளக்கை ஏற்று. விளக்கை ஏற்று விளக்கை ஏற்று, துர்மணத்தை விரட்ட நருமணத்தை ஏற்று; பயத்தை நெஞ்சிலிருந்து விரட்டு; பாவத்தை பட்டினியை உலகிலிருந்து விரட்டு; பதவிவெறி பணவெறி மத இனவெறி காமவெறி பிடிக்காது இருக்கவே, நம்பிக்கையென்னும் விளக்கை ஏற்று. விலகட்டும் அறியாமை இருள் புவியிலிருந்து; விடுபடட்டும் மனித இனம் கொலை கொடுமை வன்முறை சூழ்ச்சி கயவு சுரண்டல் . என்ற பாதகச் செயலிருந்து. அறியாமை விளக்கை ஏற்ற அறிவு என்னும் அகல் தேவை, அகலாத ஆசை என்னும் இருளை விளக்க, ஆன்மீகம் என்றும் விளக்கு தேவை, அன்பான விளக்கை ஏன்ற பாசம் என்னும் சுடர் தேவை. ஏற்று ஏற்று அநாகரீகம், ஆணவம், அடக்குமுறை என்னும் அசிங்கத்தை விரட்ட, அடக்கம் என்னும் விளக்கை ஏற்று. அகந்தை என்னும் ஆணவத்தை விரட்ட, அன்பெனும் விளக்கை ஏற்று. நேசம் என்னும் விளக்கை ஏற்று, வன்மம் சூழ்ச்சி பகை மனித இனத்தைவிட்டே ஓட விளக்கை ஏற்று; பதவிவெறி பணவெறி பிடிக்காது இருக்கவே நேர்மை உண்மை புனிதமெனும் விளக்கை புகையாது ஏற்று; தேசத்தில் ஒன்றுகூடி சகோதர சகோதரி என்ற நேயத்துடன் வாழ, ஒற்றுமையெனும் விளக்கில் பாசமெனும் நெய்யை ஊற்றி, தீராத பகை தீண்டும் பாவங்கள் தீர தீபத்தை ஏற்று. அக இருட்டை போக்க, ஜீவன் என்னும் ஜுவித விளக்கில் சமயம் சாதித்திரியை ஏற்றாது சாத்வீகம் அன்பெனும் திரியை ஏற்று. பத்து நற்குணங்களும் வளர, எட்டு தீயகுணங்களும் நீங்க, அருட்சுடர் என்னும் பரமஜோதி சுடர்விட்டு எரியட்டும். வாழ்வில் வெற்றிபெற நம்பிக்கை என்னும் விளக்கை ஏற்று. மண்ணையும் மனிதத்தையும் காக்க, எழுச்சி மறுமலர்ச்சி என்ற விளக்கை ஏற்று. மூடநம்பிக்கையை மூட்டைக்கட்டி வைக்கவே, புதுமை என்னும் விளக்கை ஏற்று புரட்சியென்னும் விடிவிளக்கை ஏற்று; உண்மையாய் ஒன்றாய் வாழ ஒற்றுமையெனும் விளக்கை ஏற்று. எரிமலையாய் வெடிக்கும் வேதனையைப் போக்க; விடியல் என்ற விளக்கை ஏற்று. சோகம் என்னும் சுமையை விரட்ட, சிரிப்பு என்னும் சிறுபொறியை ஏற்று. வெற்றி பெற தன்நம்பிக்கை என்னும் விளக்கை ஏற்று; கண்ணீரைத் துடைக்க அன்பெனும் விளக்கை ஏற்று. இதயத்தில் இருக்கும் பாரத்தை இறக்க, இறை அருள் என்னும் விளக்கை ஏற்று. பயம் எனும் இருட்டை விரட்ட, துணிவு என்னும் ஒளியை ஏற்று. தூய்மையெனும் பேரொளி படர, புரிதல் புனிதம் கண்ணியம் என்னும் ஞான ஒளியை ஏற்று. ஆணவம் அகந்தை என்னும் அறியாமை இருளை விரட்ட, அன்பெனும் சுடரை ஏற்று; வம்பு வீம்பு வழக்கு வேண்டாம் மாண்புடன் விளக்கை ஏற்று. விளக்கை ஏற்று துன்பத்தைத் துரத்த, கொடுமை விலகிட விளக்கை ஏற்று, விலகிப் போகாமல் நாம் இருக்க மனித நேயம் என்னும் விளக்கை ஏற்று. விளக்கை ஏற்று விளக்கை ஏற்று விலகிப்போகாது விளக்கை ஏற்று மனிதன் விலங்கு ஆகாமல் இருக்க விளக்கை ஏற்று. தூசி படியாது மனதைவைத்திடு மாசு படியாத உலகை படைத்திடு. மானுட இனமது உணரட்டும். உண்மை எதுவென தெரியட்டும். மதம் பிடித்த மனிதனும் தெளியட்டுமே ! முடிந்தபின் துவக்கம் எதுவும் இல்லை, மடிந்தபின் வரப்போவது எதுவும் இல்லை, அழித்தபின் கிடைக்கப்போவது எதுவும் இல்லை. அழைக்காத விருந்தாளிதான் பிறப்பும் இறப்பும் என்பதை மானுட இனமது உணரட்டும். புவியை அழிக்க புறப்பட வேண்டாம் மனித இனம்; புதிய சிந்தனை பிறக்கட்டும், புவியை காக்க புரட்சி வெடிக்கட்டும். மனித இனம் பணிவோடு பண்போடு கணிவோடு வாழட்டும்; பசிகொடுமை நீங்க பசுமை எங்கும் நிரம்பட்டும். பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப் பிழை நீக்குவதே உயிர் உள்ளாரின் கடமை பாரதிதாசன்
Chennai, Tamil Nadu, India.