தாயே நீ என் தாய் அல்லவா தாயே நீ என் தாய் அல்லவா, தேயாத பாசம் உன் அன்பல்லவா; அம்மா என்ற உடனே அருகில் ஓடிவந்திடுவாய், ஆகாயத்தில் நிலவைக் காட்டியே ஊட்டிவிடுவாய். தாயே தாயே நீ என் அம்மா அடம்பிடித்து ஓட்டம் பிடித்தால், தேடித் தேடி வந்து பற்றியது உன் கரங்கள் அல்லவா. உனது கண்கள் வடித்தது கருணையல்லவா; தீயிலே இட்டுச் சுட்டாலும் தீயாதது உனது பாசமல்லவா. ஓயாமல் அழுதுவிட்டால் ஒடிந்து போவதும் நீயல்லவா, தீராத கடனும் தாய் சேய் உறவல்லவா; நான் திகைத்துத் திணறியதும் உன் பாச மழையில் அல்லவா; ஓயாது ஓடி ஓடி தேய்ந்தது உன் சரீரம் அல்லவா. திரும்பும் இடம் எல்லாம் காண்பது உன் முகம் தான் அம்மா. திருடிய கண்கள் உனதல்லவா; நான் திகைத்து திணறியது உன் அன்பில் அல்வா, உன் பாசம் ஒன்றே உண்மையானது அல்லவா. தத்தி தத்தி நடந்து தடுமாறினால் தாவித் தாவி கட்டியணைத்தது உன் தோள்கள் அல்லவா. தாலட்டுப் பாடி உறங்கவைத்தது உன் உதடல்லவா; சற்றே இடறினாலும் பதைத்து வந்து பிடித்தது உனது கரங்கள் அல்லவா; பயமே அறியாது படுத்துறங்கியது உன் மடியில் அல்லவா. பாட்டுப்பாடியே தூங்க வைத்ததும் நீயல்லவா, பாவைவிளக்கே உனக்கு நானல்லவா. பேசும் என் பாஷையின் மொழியின் பொருளை அறிந்தவள் நீயல்லவா. ஓடி ஓடி தேய்ந்தது உன் சரீரம் அல்லவா; ஓயாது ஓடியது உன் கால்கள் அல்லவா. ஒன்றும் கேளாது உண்மை அன்பை சொரிந்தவள் நீ அல்லவா. பவ்வியமாக கருவறையில் வைத்து பத்திரமாய் வளர்த்துவந்தாய் பார்த்து மகிழ்திடவே பெத்தெடுத்தாய். தாய் இவளென்று யாறும் கூறாமலே தடுமாற்றம் இன்றி உன்னை அழைத்தேன் தேடிடும் கண்களைக் கண்ட உடனே ஓடிவந்து ஊட்டி விட்டாய் அம்மா என்று கதறிய உடனே அம்பாய் வந்து அணைத்து வம்பாய் பாலுட்டிவிட்டாய், வயிறு நிறைந்த உடனே வயிறார முத்தமிடுவாய். தாய்மையே தூய்மையம்மா தாலாட்டே வாய்மையம்பா. உன் முந்தானைச்சேலையில் முடிஞ்ச முடிச்சம்மா; முந்திவந்தது தொப்புள்கொடி தந்த தாய்சேய் உறவம்மா. உன் இரத்தத்தையே பாலாக கொடுத்தாயம்மா; என் இதய தெய்வமே நீ தானம்மா. கருவறைத் தெய்வம் நீயம்ம; கட்டிய கோபுரமே நீயம்மா; உன் உதிரத்தில் உதித்த சேயம்மா; உறங்காமல் கண்விழித்து காத்த காவல் தெய்வமே நீ அம்மா; உன் மடியில் மூச்சா போனாலும் முகம் மலந்து, முன்நூறு தடைவை உடை மாற்றிடுவாய். முடியாது கிடந்தாலும் முன்வந்து காத்திடுவாய் சிறு வெப்பம்கூட என் உடல் மீது படக்கூடாது என்றே மூடிய சேலையில் காத்துவந்தாய்; அம்மா என்றே கதறிவிடவே பதறியே அள்ளி அணைத்தாய் உன் சேலையிலே; நான் சுவைத்து குடிக்கும் போது பிடித்து ரசித்ததும் உன் சேலைதான், நான் படுத்து உறங்கியதும் உன் சேலையில்தான், நான் பிடித்து நின்றதும் உன் சேலையைப் பிடித்துத்தான், என் தலையைத் தோட்டியதும் உன் முன்தானைச் சேலைதான். தூங்காவிளக்காய் தூங்காது காத்து நின்றாய். துன்பம் ஒன்றும் நிகழாமல் துரிதமாக செயல்பட்டாய், உன் அன்புதான் இன்ப ஊற்றம்மா; உன் அன்பில் நான் அடைக்கலமம்மா. உன்னை என் சேயாய் உன் இறுதிகாலத்தில் காக்க வேண்டியது எனது கடமையம்மா; தாயே நானே உன் சிசுவாக எல்லா பிறவியிலும் பிறக்க வேண்டுமம்மா, தாயே நீ என் தாய்யம்மா, தள்ளாத வயதில் நான் தாங்கிடுவேனம்மா. நான் இருக்க தனிமை உனக்கேதம்மா. சேயாக உன்னை வைத்து தாயாக நான் காற்பேனம்மா. தயக்கம் எதற்கு உன் தள்ளாமையின் தாளாண்மையே நானம்மா, தள்ளாமையும் ஒரு தாய்மை அம்மா தழுவியே உன்னை காற்பேனம்மா வேண்டாத கவலை எதற்கம்மா, வேண்டியதைச் செய்யவே உன் வயிற்றில் உதித்தேனம்மா. தாயே நீ என் இதய தெய்வமம்மா ; தள்ளாமையிலும், தாயே உன்னை சேயாக காற்பேனம்மா, தள்ளாத வயது கழிந்து இறந்தாலும்அது என் மடியில் தானம்மா; தாயே தாயே என்று கதறியழுது உன்னை தழுவி அணைத்தே தெய்வலோகம் அனுப்புவேனம்மா. அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.